
இராமநாதபுரம்
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்றொருவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து இராமநாதபுரம் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தங்கள் மீது அரசியல் காரணத்திற்காக திட்டமிட்டு பழி சுமத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் கதறினர்.
இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20-ஆம் தேதி காவலாளர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்றை மடக்கி சோதனையிட்டபோது அதில் இருந்தவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களின் காரை சோதனையிட்டனர். அப்போது சைனைடு குப்பிகள், ஜி.பி.எஸ்.கருவிகள், பணம் போன்றவை அந்த காரில் இருந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்களை விசாரணை செய்தபோது இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருச்சி கே.கே.நகரில் வசித்து வரும் கந்தசாமி மகன் கிருஷ்ணகுமார் (43), உச்சிப்புளி நாகாச்சி தேவர்நகர் ராஜமாணிக்கம் மகன் சசிக்குமார் (32), இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த மண்டபம் தில்லைநாச்சியம்மன் குடியிருப்பில் வசித்து வந்த நடராஜன் மகன் ராஜேந்திரன் (47) என்பதும் இலங்கை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும், இவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த சென்னை உத்தண்டியில் வசித்து வந்த விஜயரெத்தினம் மகன் சுபாஷ்கரன் என்ற ஜீவன்ராஜா (41) என்பவரையும் காவலாளர்கள் கைது செய்தனர்.
இவர்கள் நால்வர் மீதும் கியூ பிரிவு காவலாளர்கள் பதிந்த வழக்கு இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணைக்காக நேற்று நால்வரும் பலத்த காவல் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.
நீதிபதி கயல்விழி கிருஷ்ணகுமார், சுபாஷரன், ராஜேந்திரன், சசிக்குமார் ஆகிய நால்வரிடமும் குற்றவாளிகள் என்று அறிவித்து அதுதொடர்பாக கருத்து கேட்டார். அப்போது, கிருஷ்ணகுமார் தான் தவறு செய்யவில்லை என்றும், சுபாஷ்கரன் அரசியல் காரணத்திற்காக திட்டமிட்டு பழிசுமத்தி உள்ளனர் என்றும், ராஜேந்திரன் மற்றும் சசிக்குமார் ஆகியோர் இவர்களை யார் என்றே தெரியாது என்றும் தெரிவித்தனர்.
பின்னர், நீதிபதி கயல்விழி இந்த வழக்கில் கிருஷ்ணகுமார் மற்றும் சுபாஷ்கரன் ஆகிய இருவருக்கும் தலா பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.45 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.
அதேபோன்று, ராஜேந்திரனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.13 ஆயிரம் அபராதமும், சசிக்குமாருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.