
நாமக்கல்
தற்போது புழக்கத்தில் இருக்கும் குறியீடு இருக்கும் 10 ரூபாய் நாணயங்கள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள குறியீடு இல்லாத நாணயம் என அனைத்து செல்லுபடியாகும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் செய்தி ஒன்றை வெளியிட்டார்.
அதில், “மத்திய அரசால் தயாரிக்கப்பட்ட, 10 ரூபாய் நாணயங்கள் இந்திய ரிசர்வ் வங்கி மூலம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
தற்சமயம் இதில் ஒரே மதிப்பில் வெவ்வேறு வடிவம் மற்றும் அளவுகளில் நாணயம் புழக்கத்தில் இருந்து வருகிறது.
கடந்த 2010-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி புதிதாக ரூபாய் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 10 ரூபாய் நாணயங்கள் புதிய குறியீட்டுடன் தயாரிக்கப்பட்டு உள்ளன.
எனவே, ஏற்கெனவே உள்ள குறியீடு இல்லாத நாணயங்களும், தற்போது புதிதாகப் புழக்கத்தில் விடப்பட்டுள்ள குறியீடு உள்ள நாணயங்களும் சட்டப்படி செல்லுபடியாகும்.
அனைத்து விதமான பணப் பரிவர்த்தனைக்கும் ஏற்றவை. எனவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வணிகர்கள் (மொத்தம், சில்லறை), சந்தை வியாபாரிகள், அரசின் நியாய விலைக் கடைகள், வரி வசூல் செய்யும் அரசு துறைகள் அனைத்தும், அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள், திரையரங்குகள், பெரிய மற்றும் சிறிய உணவு விடுதிகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் புதிய குறியீட்டுடன் கூடிய 10 ரூபாய் நாணயங்கள் மற்றும் ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களை மக்களிடமிருந்து பெற்று பணப் பரிவர்த்தனை செய்யலாம்” என்று கூறியிருந்தார்.