
நாமக்கல்
உழவர் சந்தையில் விவசாயிகளை அடிமைப்போல அவமானமாக அதிகாரிகள் நடத்துகின்றனர் என்றும் அதனை தடுக்க ஆட்சியர் உழவர் சந்தைகளில் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.
நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைப்பெற்றது.
இதற்கு ஆட்சியர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
“இராசிபுரத்தில் வேளாண் பொறியியல் துறை அலுவலகம் தொடங்க வேண்டும்” என்று விவசாயிகள் கோரியதற்கு “ராசிபுரத்தில் வேளாண் பொறியியல் துறை சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு வேளாண் கருவிகள் மற்றும் எந்திரங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்” என்று ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும் “சேலம் சேகோ சர்வில் மரவள்ளி விவசாயிகளை உறுப்பினராக சேர்க்க வேண்டும். அதன்மூலம் மரவள்ளி தொடர்பான பிரச்னைகளை சேகோ சர்வ் நிர்வாகத்துடன் விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.
கூட்டுறவு நில வள வங்கியில் பண்ணைசாரா கடனை ஒரே தவணையில் செலுத்தியவர்களுக்கு வங்கி தர வேண்டிய உறுப்பினர் பங்கு தொகை உடனடியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில், கர்நாடக மாநிலங்களில் இருந்து மஞ்சளை எடுத்து வந்து விற்பனை செய்கின்றனர். அதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் விவசாயிகளை நிர்பந்தம் செய்கின்றனர். கடும் வறட்சி நிலவும் நிலையில் கடன், வட்டி வசூலை ஓராண்டு ஒத்திவைக்க வேண்டும்.
இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் பொருட்களுக்கு அரசு உற்பத்தி மானியம் வழங்க வேண்டும்.
இராசிபுரம் உழவர் சந்தையில் கடை வைத்துள்ள விவசாயிகளுக்கு வழங்க எலக்ட்ரானிக் தராசு 2 மாதங்களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. அங்கு வரும் விவசாயிகளை அதிகாரிகள் அடிமையைப் போல் அவமானமாக நடத்துகின்றனர். எனவே, உழவர் சந்தைகளை நேரில் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இயற்கை விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் உரங்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.
ஜவ்வரிசி இலைகளில் கலப்படத்தை தடுக்க மின்சாரம், வணிகவரி, தொழில் துறை அதிகாரிகளை உள்ளடக்கிய கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும். இந்த குழுக்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும்பட்சத்தில் கலப்படம் தடுக்கப்பட்டு, மரவள்ளி விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.
மாதம் தோறும் பால் உற்பத்தியாளர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எந்த ஒரு ஏரி, குளத்திலும் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்.
ஜமீன் இளம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, முறைகேடு புகாரால் கடந்த 2 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் பயிர்க்கடன் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சேவை கிராமங்களை அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியுடன் இணைத்து பயிர்க்கடன் வழங்க வேண்டும்” போன்ற கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.
அதற்கு பதிலளித்த ஆட்சியர், “உழவர் சந்தைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும். ஜவ்வரிசி ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ள குழுக்களை அமைப்பது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். அனுமதி அளிக்கப்பட்ட எல்லா ஏரி, குளத்திலும் வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம். கரையில் இருந்து 20 மீட்டருக்கு உள்ளேயும், உயர் அழுத்த மின் கம்பங்கள் அமைந்துள்ள இடங்களில் இருந்து 10 மீட்டர் சுற்றளவிற்கு உள்ளேயும் மண் எடுக்க கூடாது” என்று தெரிவித்தார்.