அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 10 பேர் பலி - ஆயுதபூஜை அய்யோ பரிதாபம்

First Published Oct 12, 2016, 11:25 PM IST
Highlights


ஆயுதபூஜை நாளில் 2 இடங்களில் தண்ணீரில் மூழ்கி 10 பேர் பரிதாபமாக இறந்தனர். இதில், நெல்லை அருகே முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உட்பட 7 பேர் பலியாகினர். விழுப்புரம் அருகே தாமரைக்குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் இறந்தனர்.

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அம்பை ரோட்டை சேர்ந்த பிரபாகரன். இவரது மகன் ஹரக் கிருபாகரன் (21). செங்கல்பட்டு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தார்.

ஆயுதப்பூஜை விடுமுறையையெட்டி கிருபாகரன், தன்னுடன் படிக்கும் நண்பர்களான செங்கல்பட்டை சேர்ந்த தமீம் அன்சாரி (21), சோபன்பாபு (21) ஆகியோருடன் கடந்த 9ம் தேதி சொந்த ஊர் சென்றார். 
நேற்று முன்தினம் காலை சுமார் 11 மணியளவில் நண்பர்கள் 3 பேரும் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக ஆலங்குளத்தில் இருந்து பைக்கில் சென்றனர். ஆற்றங்கரை ஓரம் பைக்கை நிறுத்தி விட்டு முக்கூடல் முத்துமாலையம்மன் கோயில் பின்புறம் தாமிரபரணி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தனர்.

அப்போது தமீம் அன்சாரி சுழலில் சிக்கி தத்தளித்தார். அவரை காப்பாற்ற மற்ற 2 பேரும் முயன்றனர். ஆனால், யாருக்கும் நீச்சல் தெரியாததால் சிறிது நேரத்தில் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.

தகவலறிந்து சேரன்மகாதேவி தீயணைப்பு படை வீரர்கள் வந்த சடலங்களை மீட்டனர்.

புதுச்சேரியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சதீஷ்குமார் (25), இவரது நண்பர்கள் வசந்தராஜ் (24), காரைக்கால் நெடுங்காடு அன்னவாசல் தெரு நக்கீரன் (28), சென்னை விருகம்பாக்கம் மகன் சீனிவாசன்(26).  4 பேரும் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்தனர்.

ஆயுதபூஜை விடுமுறையை கொண்டாட 4 பேரும், நெல்லை மாவட்டம் பாபநாசத்துக்கு பஸ் மூலம் கடந்த 8ம் தேதி மாலை வந்தனர். அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அறை எடுத்து தங்கினர். 9ம் தேதி காலை குளிப்பதற்காக அருகில் உள்ள தலையணைக்கு சென்றனர்.

இரவு நீண்ட நேரமாகியும் அவர்கள் அறைக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த மண்டப நிர்வாகி விகேபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் காலை தலையணையில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் சடலம் தண்ணீரில் மிதந்தது. நேற்று காலை ஒன்றன் பின் ஒன்றாக மேலும் 3 சடலங்கள் மிதந்தன.

போலீசார், சடலங்களை மீட்டு, விசாரித்தனர். அதில் சதீஷ்குமார், வசந்தராஜ், நக்கீரன், சீனிவாசன் என தெரிந்தது. உடல்கள் அழுகிய நிலையில் இருந்ததால் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நேற்று மாலை பிரதே பரிசோதனை முடிந்து 4 சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கப்பியாம் புலியூரை சேர்ந்தவர் முருகவேல் என்கிற தேவநாதன் (40). மலேசியாவில் வேலை செய்து வருகிறார். இவரது மகன்கள் அமர்நாத் (9), ஜெயகிருஷ்ணன் (7). தனியார் பள்ளியில் 4 மற்றும் 2ம் வகுப்பு படித்து வந்தனர். இதே பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் பிரவின்குமார் (9), 4ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்றுமுன்தினம் 3 பேரும் ஆயுதபூஜை என்பதால் சைக்கிள் கழுவ, ஊர் எல்லையில் உள்ள தாமரைகுளத்துக்கு சென்றனர். அங்கு சைக்கிளை கழுவி முடித்துவிட்டு, குளிப்பதற்காக தண்ணீரில் இறங்கினர். இதில், எதிர்பாராதவிதமாக, 3 பேரும் நீரில் மூழ்கி இறந்தனர்.


பிரியாத நண்பர்கள் ; ஒன்றாகவே சென்றார்கள்

==================================
பாபநாசம் தலையணையில் மூழ்கி பலியான 4 பேரில் சீனிவாசன், வசந்தராஜ், சதீஷ்குமார் ஆகிய 3 பேரும் 8ம் வகுப்பில் இருந்தே ஒன்றாக படித்தனர். மேலும் இன்ஜினியரிங் முடித்த பிறகு சென்னையில் ஒரே இடத்தில் வேலை பார்த்தனர்.

வசந்தராஜுக்கு மெக்சிகோ நாட்டில் வேலை கிடைத்துள்ளது. தீபாவளி முடிந்ததும் அங்கு சென்று வேலையில் சேர அவர் முடிவு செய்திருந்தார். அதற்குள் சுற்றுலா வந்தபோது நண்பர்களுடன் சேர்ந்து பலியாகி விட்டார்.

2 ஆண்டில் 24 பேர் பலி

==================
முக்கூடல் முத்துமாலையம்மன் கோயில் பகுதியில் அடர்ந்த மரங்கள் மற்றும் மணல் பரப்பு அதிகம் இருப்பதால் இங்குள்ள ஆற்றில் குளிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவர்.

ஆனால், கோயில் அருகே ஆற்றில் மணல் அள்ளுவதற்காக தோண்டிய பள்ளம் இருப்பது தெரியாமல் அவர்கள் சுழலில் சிக்கி பலியாகின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் 24 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலியாகி உள்ளனர்.

படித்துறைப் பகுதியிலும், ஆற்றுக்குள்ளும் ஆழமாக தோண்டி மணல் அள்ளியதே இதற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

click me!