
நெய்வேலி
நெய்வேலியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூடி, சல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி அமைதிப் பேரணி நடத்தில் ஊர்வலம் சென்றனர்.
பருவமழை பொய்த்துப் போனதால் பயிர்கள் கருகிப் போனதைக் கண்டு தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். இவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தமிழகத்தில் சல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் மாணவர்கள், இளைஞர்கள் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நெய்வேலியில் நேற்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து பேரணி மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்.எல்.சி. மத்திய பேருந்து நிலைய மைதானம் முன்பு நேற்று மாலை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று திரண்டனர்.
பின்னர், அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக பேருந்து நிலையதிற்குச் சென்றனர். இந்த ஊர்வலத்தின் போது மாணவர்கள், சல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும், தண்ணீரின்றி பயிர்கள் கருகியதால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதனை தொடர்ந்து, பேருந்து நிலையம் முன்பு மாணவர்கள் ஒன்று கூடி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, மாணவர்கள் மனித சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த நெய்வேலி நகர காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மனிதசங்கிலி நடத்த அனுமதி கிடையாது என்று கூறினர்.
இதைகேட்ட மாணவர்கள் காவலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, காவலாளர்கள் உரிய அனுமதியின்றி போராட்டம், பேரணி நடத்தக்கூடாது என்று கூறி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைக் கேட்டு, மனிதசங்கிலி போராட்டத்தை முடித்துக் கொண்ட மாணவர்கள், வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து கலைந்தனர்.