
ஜெயலலிதாவை 36 ஆண்டுகள் தோளில் சுமந்தாராம் சசிகலா… சொல்கிறார் நடராஜன்…
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக விற்கு யார் தலைமை தாங்குவது என சிக்கல் எழுந்தது. ஆனால் அமைச்சர்கள்,எம்.பி க்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஆதரவுடன் சசிகலா அதிமுக வின் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றினார்.
ஆனால் அதிமுக வின் அடிமட்டத் தொண்டர்கள் சசிகலாவை பொதுச் செயலாளராக ஏற்க மறுத்து வருகிறார்கள். ஜெயலலிதாவின் ரத்த சொந்தமான தீபா அரசியலுக்கு வரவேண்டும் என விரும்புகிறார்கள்.
இந்நிலையில் தஞ்சாவூரில் பேசிய சசிகலாவின் தம்பி திவாகரன், அ.தி.மு.க. சரித்திரத்தில், தஞ்சாவூர்க்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்றும் நாங்கள் ஒன்றும் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. அ.தி.மு.க.வின் வளர்ச்சி ஒவ்வொன்றிலும் எங்கள் பங்கு இருக்கிறது என்றார்.
மேலும் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு கட்சியை காப்பாற்றுவதிலும் , உடைந்த கட்சியை இணைத்து , இரட்டை இலையை மீட்டெடுத்ததிலும் நடராஜனின் பங்கு மகத்தானது அளப்பரியது, அதிமுகவை வீழ்த்த சதி நடக்கிறது, அதை முறியடிப்போம் என்றும் திவாகரனின் பேசினார்..
திவாகரனின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, அதிமுக எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு , ஜெயலலிதாவின் கடின உழைப்பால் , லட்சக்கணக்கான தொண்டர்களால் கட்டமைக்கப்பட்ட கட்சி அதை ஏதோ இவர் தான் கட்டி காப்பாற்றியது போலவும், ஆபத்பாண்டவர் போலும் பேசி வருவது கண்டிக்கத்தக்கது. சசிகலா திவாகரனை கண்டிக்க வேண்டும். இனிமேல் இது போல் பேசாமல் பார்த்துகொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தஞ்சாவூரில் நடைபெற்ற கலை விழாவில் பேசிய சசிகலாவின் கணவர் நடராஜன், எம்ஜிஆர் மரணத்திற்குப் பிறகு நானும் எங்களின் குடும்பத்தினர்தான் அதிமுக வையும் ஜெயலலிதாவையும் பாதுகாத்தாக தெரிவித்தார்.
ஜெயலலிதாவை கடந்த 36 ஆண்டு காலம் எனது மனைவி சசிகலா தோளில் சுமந்தார் என்றும் அவரைப் போய் ஜெயலலிதாவை கொலை செய்து விட்டார் என்று அபாண்டமாக பழி சுமத்துவதாகவும் நடராஜன் தெரிவித்தார்.
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மூலம் அதிமுக வை உடைக்க பாஜக சதி செய்வதாகவும் நடராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.