விருதுநகரில் ஊராட்சிமன்ற தலைவர் மர்ம மரணம்; உறவினர்கள் சாலை மறியல்

By Velmurugan s  |  First Published Jun 21, 2023, 9:51 AM IST

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி விருதுநகர் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அடுத்த கிழவனேரி கிராம ஊராட்சி தலைவராக பொறுப்பு வகித்தவர் கார்த்திக் (வயது 31). இவரது மனைவி முனீஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். காரியாபட்டி பாண்டியன்நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஊராட்சித் தலைவர் கார்த்திக்கிற்கு தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கார்த்திக் நேற்று முன்தினம் பிற்பகல் காரியாபட்டி பாண்டியன் நகரில் உள்ள அந்த பெண் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வீட்டில் அறைக்குள் சென்று கார்த்திக் கதவை பூட்டி கொண்டதாக கூறப்படுகிறது. வெகுநேரமாகியும் அறை கதவை திறக்காததால் அந்த பெண், கார்த்திக் நண்பர்களை தொலைபேசியில் அழைத்து விவரத்தை கூறியுள்ளார்.

Latest Videos

undefined

3 வயது சிறுவனை தள்ளிவிட்டு தந்தையை மிதித்து கொன்ற காட்டு யானை

சற்று நேரத்தில் அங்கு வந்த கார்த்திக் நண்பர்கள் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சேலையால் தூக்கு போட்ட நிலையில் கார்த்திக் மயங்கி கிடந்தார். உடனே ஊராட்சி தலைவர் கார்த்திக்கை மீட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே கார்த்திக் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இத்தகவல் அறிந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அவர் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து ஊராட்சி தலைவர் கார்த்திக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பாஜகவின் பி டீம் நான் அல்ல; என்னுடைய மறு உருவம் தான் பாஜக - சீமான் விளாசல்

ஆனால், கார்த்திக் இறப்பில் மர்மம் நீடிப்பதாகவும், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் கூறி உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த டிஎஸ்பி பவித்ரா மற்றும் காவல் துறையினர் நேரில் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கார்த்திக் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், முத்துமாரி என்பவரது வீட்டில் கார்த்திக் இறந்து கிடந்ததால் முத்துமாரியிடமும் காவல் துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

கார்த்திக் இறப்பு குறித்து உரிய விசாரணை மேற்கொண்டால் தான் சடலத்தை வாங்குவோம் எனக்கூறி சடலத்தை வாங்க மறுத்து கார்த்திக்கின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் திரும்பி சென்றனர். மேலும் கார்த்திக் இறப்பு குறித்து காரியாபட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!