விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.25 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டு, மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. எனவே பொதுமக்கள், வியாபாரிகள், அரசியல் கட்சியினர் என யாரும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லக்கூடாது உள்ளிட்ட ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
undefined
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதை தவிர்ப்பதற்காக மாவட்ட எல்லைகள் மற்றும் பிரதான சாலைகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் மற்றும் நபர்களிடம் நடத்தப்படும் சோதனைகளில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுவது தேர்தல் ஆணையத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே ஒரு பிரதான சாலைக்கு 6 பறக்கும் படை அதிகாரிகளை நியமித்து கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.25 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். வங்கி ஏ.டி.எம்.களில் வைப்பதற்காக மதுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.25 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும், இல்லையெல் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.