விருதுநகரில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து இயக்கப்பட்டுள்ளதால் கிராமவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே இருக்கிறது மீனாட்சிபுரம் கிராமம். இங்கு பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயம் பார்ப்பது கிராமத்தின் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
இந்த கிராமத்திற்கு சுதந்திரம் பெற்றதில் இருந்து பேருந்து இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர். பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என பொதுமக்கள் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை நீடித்துள்ளது. திடீரென்று மருத்துமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.
undefined
இதுகுறித்து பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். மாவட்ட ஆட்சியரிடம் பேருந்து விட வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்லி மனு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்திருக்கிறது. அரசியல் தலைவர்களும் தேர்தல் காலங்களில் வந்து பேருந்து விடுவதாக வாக்குறுதி அளித்து பின்னர் அதை மறந்து விடுகிறார்கள் என்று கிராம வாசிகள் வேதனை தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் பலகட்ட போராட்டத்திற்கு பின் கிராமத்திற்கு பேருந்து விட அரசு முடிவு செய்தது. இதனால் கிராம மக்கள் உற்சாகம் அடைந்தனர். அதன் படி முதன்முதலாக வந்த பேருந்தை வரவேற்று மகிழ்ந்தனர். பேருந்து ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகளுக்கு பின்னர் தங்கள் கிராமத்திற்கு பேருந்து விடப்பட்டுள்ளதால் கிராமமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.