விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 71. கடந்த சில நாட்களான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த புகழேந்தி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே, விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்காக டிஸ்சார்ஜ் ஆகி வந்த அவர், பொதுக்கூட்ட மேடையில் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி புகழேந்தி காலாமானார்.
undefined
இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புகழேந்தி மறைவையடுத்து, அந்த தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. இது தேர்தல் ஆணையத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட அடுத்த 6 மாதங்களுக்குள் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. எனவே, விக்கிரவாண்டி சட்டப்பேரவைக்கு எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி காலியானதையடுத்து, அந்த தொகுதிக்கு மக்களவைத் தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவிற்கு ஜாமீன் மறுப்பு!
அந்த வகையில், மக்களவைத் தேர்தலோடு சேர்த்து விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் மொத்தம் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, இறுதிக்கட்ட வாக்குப்பதிவின்போது, விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.