நேற்று இரவு வரை கட்சிப்பணி ஆற்றிய திமுக எம்எல்ஏ புகழேந்தி அகால மரணம்

By Velmurugan s  |  First Published Apr 6, 2024, 10:51 AM IST

விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.


விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த புகழேந்தி 1973ம் ஆண்டு முதல் தொடர்ந்து திமுகவில் கட்சிப்பணி ஆற்றி பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். திமுக.வின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடியின் தீவிர ஆதரவாளரான இவர் கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதியில் நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இருப்பினும், புகழேந்தியின் உழைப்பின் மீது நம்பிக்கைக் கொண்ட பொன்முடி 2021ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் புகழேந்திக்கு மீண்டும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். அதனை பயன்படுத்திக் கொண்ட புகழேந்தி பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார்.

Latest Videos

"பா.ஜ.க. வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு.. அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்" - முதல்வர் ஸ்டாலின்!

இதனிடையே சட்டமன்ற உறுப்பினர் புகழேந்திக்கு கல்லீரலில் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதனை முறையாக கண்டுகொள்ளாத புகழேந்தி தொடர்ந்து கட்சி பணியிலும், மக்கள் பணியிலும் தீவிரம் காட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் மக்களவைத் தேர்தலுக்காக தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று மாலை முதல்வர் விழுப்புரத்தில் கலந்து கொண்ட பிரசாரக் கூட்டத்திலும் புகழேந்தி கலந்து கொண்டார். அதன் பின்னர் புகழேந்திக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து ரத்த வாந்தி எடுத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

திமுக எம்எல்ஏ உயிரிழப்புக்கு இதுதான் காரணமா? யார் இந்த புகழேந்தி? அரசியலில் கடந்து வந்த பாதை!

சட்டமன்ற உறுப்பினருக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் விழுப்புரத்திற்கு வரவழைக்கப்பட்டனர். சிகிச்சை பலன் இன்றி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி பரிதாபமாக உயிரிழந்தார். எம்எல்ஏவின் உயிரிழப்பால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் பொன்முடி உடனடியாக மருத்துவமனைக்கு வந்து குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் முதல்வர், கட்சியின் மூத்த அமைச்சர்கள் இன்று விழுப்புரம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!