கள்ளக்குறிச்சி அருகே கூடுதல் பேருந்து வசதிகள் இல்லாததால் ஒரே பேருந்தில் பல மாணவர்கள் பயணம் செய்யும் அவலம் நிகழ்ந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கிறது தியாகதுருகம் கிராமம். நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இங்கு வசித்து வருகின்றனர். இந்த ஊரில் பேருந்து வசதிகள் அதிகம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். மணிக்கணக்கில் அவர்கள் பேருந்தை எதிர் நோக்கி காத்திருக்கும் நிலைமை இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தநிலையில் தியாகதுருகம் கிராமத்தில் இருந்து மணலூர்பேட்டைக்கு தினமும் இரண்டு முறை மட்டுமே அரசு பேருந்து இயங்கி வருகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் ஒரே பேருந்தில் முண்டியடித்து ஏற வேண்டிய நிலை இருக்கிறது. பேருந்தில் இடமில்லாமல் மேற்கூரையில் அமர்ந்தும் படிக்கட்டுகளில் தொங்கியும் பயணம் செய்கின்றனர். மேலும் பேருந்தின் பின்பகுதியில் தொங்கிக்கொண்டும் மாணவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை விடுத்தும் இது வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே இனியாவது பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி கூடுதல் பேருந்துகள் இயக்க அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கிராம மக்கள் கூறியுள்ளனர்.