ரிஷிவந்தியம் தொகுதியில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் குறித்து அதிமுக வேட்பாளர் பேசிய பேச்சைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட பிரேமலதா விஜயகாந்த் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதது தொண்டர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் குமரகுருவிற்கு ஆதரவாக கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாணாபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.
மேடையில் அதிமுக வேட்பாளர் குமரகுரு, தேமுதிக பற்றியும், விஜயகாந்த் பற்றியும் பேசும் போது நா தழுதழுத்து பேசினார். அதேபோல் அவர் பேசியதை மேடையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக வேட்பாளர் குமரகுரு பேச பேச கண்ணீர் விட்டு அழுதார்.
அதேபோல வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து பேசும்போது தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் குறித்தும், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி குறித்தும் பேசுகையில் கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் தொண்டர்களிடம் நமது கூட்டணி கட்சியின் அதிமுக வேட்பாளர் குமரகுருவிற்கு வாக்களிக்க வேண்டும் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேமுதிக, அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.