கொரோனா பரவலை தடுக்க கிராமப்புறங்களில் இருந்து விழுப்புரம் நகரத்திற்குள் வர இன்று முதல் பொதுமக்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க கிராமப்புறங்களில் இருந்து விழுப்புரம் நகரத்திற்குள் வர இன்று முதல் பொதுமக்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுவரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது மதுரை, தேனி, நெல்லை, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு கணிசமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுவரை தமிழகத்தில் 1,22,350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,727 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று வரை விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,339 ஆக உள்ளது. 760 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 561 பேர் சிகிச்சையில் உள்ளனர். 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தனிநபர் இடைவெளியை சரியாக கடைபிடிக்காததால் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினந்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது.
குறிப்பாக, விழுப்புரம் நகரில் அதிகமானோர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கும் வகையிலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி விழுப்புரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புறங்களை சேர்ந்த பொதுமக்கள் இன்று முதல் விழுப்புரம் நகரத்திற்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், அரசு, தனியார் ஊழியர்களையும், மருத்துவ சிகிச்சை தொடர்பாக வருபவர்களை மட்டும் காவல்துறையினர் அனுமதித்து வருகின்றனர்.