ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த சதீஷ் உட்பட 3 பேரும் செங்குட்டுவனை சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். சரிந்து விழுந்த செங்குட்டுவன் மீது தலைக்கேறிய போதையுடன் மேஜையை தூக்கி போட்டு பலமாக அமுக்கி உள்ளனர். இதில் மூச்சு திணறிய செங்குட்டுவன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இருக்கிறது தீர்த்த குளம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் செங்குட்டுவன்(49). பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகராக இருந்து வந்தார். மாற்றுத்திறனாளியான இவர் அப்பகுதியில் சிக்கன் கடை வைத்து தொழில் பார்த்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. தினமும் நண்பர்களுடன் சேர்ந்து கடையில் மது குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதன்படி நேற்று இரவும் செங்குட்டுவன் தனது சிக்கன் கடையில் வைத்து நண்பர் சதீஷ் உட்பட மூன்று பேருடன் மது அருந்தி இருக்கிறார்.
அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த சதீஷ் உட்பட 3 பேரும் செங்குட்டுவனை சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். சரிந்து விழுந்த செங்குட்டுவன் மீது தலைக்கேறிய போதையுடன் மேஜையை தூக்கி போட்டு பலமாக அமுக்கி உள்ளனர். இதில் மூச்சு திணறிய செங்குட்டுவன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த காவலர்கள் பலியான செங்குட்டுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முன்னதாக செங்குட்டுவனை கொலை செய்ததாக சதீஷ் காவல்துறையில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து இருக்கும் போலீசார் கொலையில் தொடர்புடைய மற்ற மூவரையும் தேடி வருகின்றனர். மது போதையில் செங்குட்டுவனை நண்பர்கள் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.