கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கணவன், மனைவி கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த நிலையில், பெற்றோர் இன்றி தவிக்கும் 3 குழந்தைகளின் முழு கல்விச் செலவையும் அதிமுக ஏற்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஐ கடந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஜிப்மர் மருத்துவமனைகளில் 120க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைநகரில் காவல் நிலையத்திற்கு அருகிலேயே கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றுள்ளது. கள்ளச்சாராய விற்பனைக்கு திமுக நிர்வாகிகள் பின்புலமாக செயல்பட்டுள்ளனர்.
undefined
கள்ளக்குறிச்சி உயிரிழப்பு சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இது போதாது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், உயிரிழந்தோரின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற அறிவுறுத்தி உள்ளார்.
இதனிடையே கருணாபுரம் பகுதியில் சுரேஷ் மற்றும் அவரது மனைவியும் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு 1 பெண், 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மூவரும் முறையே 11, 9, 8 ஆகிய வகுப்புகளில் படித்து வருகின்றனர். தாய், தந்தையரை இழந்த நிலையில் இவர்களின் வயதான பாட்டியுடன் தான் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவும் விதமாக 3 பிள்ளைகளின் கல்விச் செலவையும் அதிமுகவே ஏற்றுக் கொள்ளும் என பழனிசாமி தெரிவித்துள்ளார். அதே போன்று 10 ஆண்டுகளுக்கு இந்த குடும்பத்திற்கு மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.