ஆம்பூர் அருகே அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரவிச்சந்திரன். இவரது மகன் கௌரிசந்தர் (வயது 24). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் (புல்லட் ) வாணியம்பாடியில் இருந்து வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் சென்னை, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தின் மீது வளைவில் சென்றபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சினிமா பாணியில் 40 அடி பள்ளத்தில் வாகனம் ஒரு இடத்திலும், இளைஞர் சாலையோரம் உள்ள பாழடைந்த கிணற்றில் விழுந்துள்ளார். இதனை பார்த்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சிலர் ஆம்பூர் கிராமிய போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
மதுரையை சேர்ந்த பிரபல ரௌடி தலையை துண்டித்து கொடூர கொலை; கரூரில் பரபரப்பு
தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறந்த நிலையில் இருந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் மேம்பாலத்தின் மீது இருந்து 40 அடி பள்ளத்தில் விழுந்து கிணற்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.