வேலூரில் கருப்பு பூஞ்சை தொற்றால் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருக்கும் அதேவேளையில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மியூகோர்மைகோசிஸ் (Mucormy cosis) எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவு உள்ளவர்கள், எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்த புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் ஆகியோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.
undefined
மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களைக் கடந்து தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்ல தமிழகத்தில் முதன் முறையாக கருப்பு பூஞ்சை தொற்றால் மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனா என்பவர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை உருவாக்கியது. சேலத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட 26 வயது இளைஞரின் கண் அகற்றப்பட்டது. இப்படி அடுத்தடுத்து அதிர்ச்சியான செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் வேலூரில் கருப்பு பூஞ்சை தொற்றால் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். மேலும் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 40 பேரில் 10 பேர் மட்டுமே வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றவர்கள் அனைவரும் அருகேயுள்ள மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.