ஜோலார்பேட்டை அருகே பீடி சுற்றும் கூலி தொழிலாளிக்கு ரூ.40 கோடி ஜிஎஸ்டி பாக்கி உள்ளதாக வந்த கடிதத்தால் அதிச்சி அடைந்த பெண்மணி காவல் துறையில் முறையிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி மலர் (வயது 54). பீடி சுற்றும் தொழில் செய்தும், காலை நேரத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 100 நாள் கூலி வேலை செய்தும் வருகிறார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி அன்று இவருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அதனை என்னவென்று தெரியாமல் வீட்டின் உள்ளே வைத்துவிட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார்.
இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் ஒரு கடிதம் வந்துள்ளது. இதனால் அதிர்ந்து போனவர் இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார். அதன் பிறகு அவருடைய மகன் பெருமாளிடமும் இதைப்பற்றி கூறியுள்ளார். அதை பார்த்தபோது. விழுப்புரம் மாநில வணிக வரி துணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து அந்த கடிதம் வந்துள்ளது. அதில் TN GST actன்படி 21 கோடியே 92 லட்சத்தி 29 ஆயிரத்து, 406 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், மேலும் 2020, 2021 மற்றும் 2022 ஆகிய மூன்று ஆண்டின் CGST மற்றும் SGST என இரண்டு ஜிஎஸ்டிக்கும் அபராதம் விதித்து அதற்கு உண்டான வட்டி என சுமார் 40 கோடி செலுத்த வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் பாம்பை கொன்று யூடியூபில் பீலா விட்ட வாலிபர்; வீட்டுக்கே சென்று தூக்கிய வனத்துறை
இதைப்பற்றி பலரிடம் விசாரித்து பின்னர் நேற்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனக்கு வந்துள்ள ஜிஎஸ்டி கடிதம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர், இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மலர் கூறுகையில், நான் அன்றாடம் பீடி சுற்றியும் மற்றும் 100 நாள் வேலைக்கு சென்று கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு எழுத, படிக்க கூட முழுமையாக தெரியாது.
இந்நிலையில் பல கோடி ரூபாய் கட்டு என்று சொன்னால் நான் எப்படி கட்டுவது? அதே நேரத்தில் 100 நாள் வேலை செய்த 2000 ரூபாய் வங்கிக் கணக்கில் உள்ளது. அதனை எடுக்க சென்றபோதுதான் இந்த தகவல் தெரிய வந்தது. அதன் மூலமாக என்னுடைய வங்கி கணக்கு முடக்கி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் வரிசையில் அதிமுகவில் புதிய அணி; தொடர்ந்து பலவீனமடையும் ஓபிஎஸ் டீம்
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் பெருமாள் கூறுகையில், கூலி வேலை செய்யும் எங்களுக்கு இவ்வளவு தொகை கட்ட சொல்லி வந்தால் நாங்கள் என்ன செய்வது? அதே நேரத்தில் ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்டவைகளை பயன்படுத்தி மகளிர் லோன் எடுத்ததாகவும் அதனை பயன்படுத்தி இது போன்ற தவறுகள் நடந்திருக்கலாம். இது போன்ற சம்பவங்கள் வேறு யாருக்கும் வரக்கூடாது. அரசு இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் வீட்டின் அருகே உள்ள மகளிர் குழுவில் தனது ஆதார் கார்டு மற்றும் பேன் கார்டு கொடுத்து அவ்வபோது கடன் பெற்று வந்தேன். இதனை பயன்படுத்தி எம்கே ட்ரேடர்ஸ் என்கிற நிறுவனத்தின் பெயரில் தனக்கு இவ்வளவு ஜிஎஸ்டி தொகை கட்ட வேண்டும் என நோட்டீஸ் வந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தள்ளனர். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 10க்கும் மேற்பட்ட புகார்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வந்துள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் ஏழை, எளிய மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.