வேலூரில் வாடிக்கையாளர்களின் பணத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி தோற்ற வங்கி மேலாளர் கைது

By Velmurugan s  |  First Published Mar 20, 2023, 10:07 AM IST

வேலூர் மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்காக வாடிக்கையாளர்களின் ரூ.34 லட்சத்து 10 ஆயிரத்தை கையாடல் செய்த பாரத ஸ்டேட் வங்கி உதவி மேலாரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் (ராஸ்மிக்) கல்விக் கடன் பிரிவில் உதவி மேலாளராக யோகேஸ்வர பாண்டியன் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கல்வி கடன் காப்பீட்டுத் தொகை 34 லட்சத்து 10 ஆயிரத்து 622 ரூபாயை வங்கி கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்ததாக எஸ்பிஐ வங்கியின் முதன்மை மேலாளர் சிவகுமார் இவர் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், யோகேஸ்வர பாண்டியனை கைது செய்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வாடிக்கையாளர்களின் ரூ.34 லட்சத்து 10 ஆயிரத்து 622 ரூபாயை கையாடல் செய்தது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் கையாடல் செய்யப்பட்ட பணம் முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக பயன்படுத்தப்பட்டு அவை அனைத்தும் நட்டமடைந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேறகொண்டு வருகின்றனர். 

Latest Videos

அண்மை காலமாக தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை பறிகொடுத்து இளைஞர்கள் பலரும் கடனாளியாக மாறி தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டிருக்கும் நிலையில் அந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று மாநில அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை கையாடல் செய்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!