தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதுமுதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன்காரணமாக முக்கிய அணைகள் பல வேகமாக நிரம்பின. தமிழகத்தின் பிரதான அணையான மேட்டூர் அணை கடந்த வருடம் மட்டும் நான்குமுறை நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
undefined
டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடையும் தருவாயில் இருந்த பருவ மழை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்தது. சென்னை, காஞ்சிபுரம், வேலூர், நாகப்பட்டினம் உட்பட சில மாவட்டங்களில் ஜனவரி தொடக்கத்தில் இருந்து பரவலாக மழை பெய்து வந்தது. பின் கடந்த 10 ம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை நிறைவடைந்தததாக வானிலை மையம் அறிவித்தது. இதனிடையே அதிகாலை நேரத்தில் தற்போது பனி கொட்டி வருகிறது. காலை 8 மணிக்கு மேலாகவும் பனி நீடிப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
இந்தநிலையில் இன்று அதிகாலை சென்னை உட்பட வடமாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இது மேலும் நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்தமிழகத்தில் லேசான மழைக்கும் வடதமிழகத்தில் மிதமான மழைக்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 2 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.
Also Read: கொதிக்கும் நீரில் தவறி விழுந்த 2 வயது குழந்தை..! உடல் வெந்து பரிதாப பலி..!