கிராமத்தை சேர்ந்த இளைஞர்களும் பொதுமக்களும் மலைப்பாம்புகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி 15 அடி நீளத்தில் இருந்த மலைப்பாம்புகளும் லாவகமாக பிடிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருக்கிறது குந்தாணிமேடு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் அசோகன். விவசாய தொழில் பார்த்து வரும் இவருக்கு சொந்தமாக வயல்நிலங்கள் இருக்கின்றன. நேற்று அந்தப்பகுதியைச் சேர்ந்த சிலர் அசோகனின் நிலத்தில் வேலைபார்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு இரண்டு மலைப்பாம்புகள் வந்திருக்கிறது. அவை இரண்டும் சுமார் 15 அடி நிலத்தில் இருந்தது. இதனால் வேலைபார்த்து கொண்டிருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
undefined
வயல்நிலத்தில் இரு மலைப்பாம்புகள் புகுந்த தகவல் கிராமத்தில் காட்டுத்தீ போல பரவி மக்கள் பெருமளவில் கூடினர். நிலத்தின் உரிமையாளர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். ஆனால் வனத்துறையை சார்ந்தவர்கள் வர தாமதமானதாக கூறப்படுகிறது. இதனால் கிராமத்தை சேர்ந்த இளைஞர்களும் பொதுமக்களும் மலைப்பாம்புகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி 15 அடி நீளத்தில் இருந்த இரு மலைப்பாம்புகளும் லாவகமாக பிடிக்கப்பட்டது.
பின் இரண்டையும் சாக்குப்பையில் கட்டி வாணியம்பாடியில் இருக்கும் வனத்துறை அலுவகத்தில் ஒப்படைக்க இளைஞர்கள் சென்றனர். அப்போது அங்கு வனத்துறை அதிகாரிகள் வரவே மலைப்பாம்பு புகுந்த தகவல் அளித்தும் அதிகாரிகள் வர தாமதமானது குறித்து கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு வனத்துறை ஊழியர்கள் அப்படித்தான் தாமதமாகும், முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வனத்துறை ஊழியர்களின் அலட்சிய போக்கை உயரதிகாரிகளுக்கு புகாராக அளிக்க இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.