மருத்துவர்கள் பணியில் இல்லாமல் செவிலியர்களே பிரசவம் பார்த்தது உறுதியானது. மேலும் பிரசவத்தின் இடையில் சந்தேகம் ஏற்படவே செல்போனில் மருத்துவரை தொடர்பு கொண்டு பேசியதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
திருப்பத்தூரைச் சேர்ந்தவர் இம்ரான்(30). இவரது மனைவி பரீதா(25). இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதன்பின் பரீதா கர்ப்பம் தரித்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த 21ம் தேதி அதிகாலையில் பரீதாவிற்கு பிரசவ வலி ஏற்படவே அவரை உறவினர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பணியில் மருத்துவர்கள் யாரும் இல்லாமல் இருந்துள்ளனர்.
undefined
இதனால் மருத்துவமனையில் இருந்த செவிலியர்களே பரீதாவிற்கு பிரசவம் பார்த்துள்ளனர். அதில் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே பரீதா உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாலேயே பரீதா இறந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினார். தகவலறிந்து வந்த காவலர்கள் முறையான விசாரணை நடத்தி குற்றம் இளைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதையடுத்து மருத்துவ மற்றும் ஊரகப்பணிகளின் இயக்குனர் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கடந்த இருதினங்களாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். அதில் மருத்துவர்கள் பணியில் இல்லாமல் செவிலியர்களே பிரசவம் பார்த்தது உறுதியானது. மேலும் பிரசவத்தின் இடையில் சந்தேகம் ஏற்படவே செல்போனில் மருத்துவரை தொடர்பு கொண்டு பேசியதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. குழந்தை பிறந்த பிறகு பரீதாவிற்கு முறையான சிகிச்சைகள் அளிக்காமல் செவிலியர்கள் வெளியே சென்றுள்ளனர். அதன்காரணமாகவே அவர் உயிரிழந்திருக்கிறார்.
இதுவரையிலும் இரண்டு கட்ட விசாரணை நடந்து முடிந்துள்ளது. மூன்றாம் கட்ட விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செவிலியர்கள் பிரசவம் பார்த்து கர்ப்பிணி பெண் பலியான சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.