வெங்காய விலையை கட்டுப்படுத்தும் வகையில் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் 40 ரூபாய்க்கு விற்கப்பட இருக்கிறது.
கடந்த சில வாரங்களாக வெங்காய விலை நாடு முழுவதும் தாறுமாறாக உயர்ந்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். ஏழைகள் மற்றும் நடுத்தரவர்க்கத்தினர் சமையலுக்கு வெங்காயத்தை பயன்படுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டனர். வெங்காய விலை உயர்வால் உணவகங்களில் வெங்காயத்தை உபயோகப்படுத்துவதை உரிமையாளர்கள் தவிர்த்து வருகின்றனர்.
undefined
இதனிடையே வெங்காய தட்டுப்பாட்டை போக்க எகிப்து நாட்டில் இருந்து தமிழகத்தில் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. அதன்பிறகு வெங்காய விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. உச்சபட்சமாக கடலூரில் நேற்று கிலோ 10 ரூபாய் வரையிலும் குறைத்து விற்கப்பட்டது. இந்தநிலையில் வெங்காய பதுக்கலை தடுக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடைகள் மற்றும் குடோன்களில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து ரேஷன் கடைகள் மூலமாக வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இருக்கும் 1842 ரேஷன் கடைகள் மூலம் இன்று முதல் வெங்காய விற்பனையை மாவட்ட நிர்வாகம் தொடங்க இருக்கிறது. இதற்காக ஒருநாளைக்கு 31 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட உள்ளது. ரேஷன் கடையில் ஒரு கார்டுக்கு ஒரு கிலோ வெங்காயம் 40 ரூபாய்க்கு விறக்கப்பட இருக்கிறது.
முதற்கட்டமாக வேலூர் மாநகராட்சியில் இருக்கும் 137 கடைகளில் வெங்காய விற்பனையை தொடங்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.