வேலூரில் தேர்தல் நடக்குமா, நடக்காதா..? ஆன்லைனில் நடக்கும் தேர்தல் சூதாட்டம்!

By Asianet TamilFirst Published May 7, 2019, 8:08 AM IST
Highlights

ரகசியமாக நடைபெறும் இந்த சூதாட்டத்தில் பலரும் பங்கேற்று கேட்ப்படும் கேள்விகளுக்கு விடை அளித்துவருவதாகவும், குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் முதல் லட்சக்கணக்கில் பணத்தை பந்தயமாகக் கட்டியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

கிரிக்கெட்டில் சூதாட்டம் கேள்விப்பட்டிருப்பீர்கள். தேர்தல் சூதாட்டம் கேள்விப்பட்டிருகிறீர்களா? தேர்தல் நடக்குமா, நடக்காதா என்பது குறித்த ஒரு ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தில் நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. சூதாட்டத்துக்கு ஆளான தொகுதி தேர்தல் ரத்தான வேலூர் தொகுதிதான்.

 
வேலுாரில் ஏப்ரல் 18 அன்று நடைபெறுவதாக இருந்த  நாடாளுமன்றத் தேர்தல், வருமான வரி ரெய்டில் சிக்கிய பண மூட்டைகளால ரத்தானது. ரத்து செய்யப்பட்ட தேர்தலை நடத்த வேண்டும் என திமுக, அதிமுக கட்சிகள் தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளன. என்றாலும் எப்போது தேர்தல் நடைபெறும் என்று உறுதியாகத் தெரியவில்லை.  தற்போது இதை வைத்துதான் ஆன்லைன் சூதாட்டம் நடைபெற்றுவருகிறது.
வேலுாரில் எப்போது தேர்தல் நடக்கும், திமுக, அதிமுகவில் யார் போட்டியிடுவார்கள்?, ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்களே மீண்டும் போட்டியிடுவார்களா அல்லது புதிய வேட்பாளர்கள் களத்தில் இறக்கப்படுவார்களா போன்ற கேள்விகளை மையமாக வைத்து இந்த சூதாட்டம் நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தால், கட்டும் தொகைக்கு இரண்டு மடங்கு தொகை கிடைக்கும் என்று கூறி ஆன்லைன் சூதாட்டம் நடைபெற்றுவருவதாகத் தெரிகிறது.


ரகசியமாக நடைபெறும் இந்த சூதாட்டத்தில் பலரும் பங்கேற்று கேட்ப்படும் கேள்விகளுக்கு விடை அளித்துவருவதாகவும், குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் முதல் லட்சக்கணக்கில் பணத்தை பந்தயமாகக் கட்டியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் மிகச் சரியாக விடை அளித்தவர்களுக்கு இரண்டு மடங்கு பணம் வங்கிக் கணக்கு மூலம் செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
மிக ரகசியமாக நடைபெற்றும் வரும் இந்தத் தேர்தல் சூதாட்டம் பற்றி போலீஸாரும் ரகசியமாக விசாரித்துவருவதாக கூறப்படுகிறது.

click me!