ஆட்சியாளர்களுக்கு தாமதமாக பிறக்கும் ஞானம்..! பயனற்ற ஆழ்துளைக்கிணறுகளை உடனடியாக மூட உத்தரவு..!

By Manikandan S R S  |  First Published Oct 26, 2019, 3:44 PM IST

பயன்படாத நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டு வருகின்றனர்.


திருச்சி அருகே இருக்கும் நடுக்காட்டுபட்டியைச் சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி தம்பதியரின் 2 வயது மகன் சுஜித் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான். நேற்று மாலை 5.30  மணி அளவில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை பத்திரமாக மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர்.

Latest Videos

undefined

களத்தில் தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சிய, அதிகாரிகள் ஆகியோர் முகாமிட்டு மீட்பு பணிகளை கவனித்து வருகின்றனர். 21  மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத வண்ணம் பயனற்ற ஆழ்துளைக்கிணறுகளை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனிடையே வேலூர் மாவட்டத்தில் உள்ள பயன்படாத, கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை ஆய்வு செய்து உடனடியாக மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். அதே போல் தேனி மாவட்டத்தில்,  திறந்த நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார். ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டனவா? என்பதை வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடலூர் மாவட்டத்திலும் திறந்த நிலையில் ஆழ்துளை கிணறுகள் இருந்தால் சீல் வைக்க வேண்டும் என்று கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்று தமிழகம் முழுவதும் இருக்கும் மாவட்டங்களில் ஆழ்துளைக்கிணறுகளை மூட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகின்றனர்.

click me!