வேலூரில் 4 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த நிலையில் அவர் படித்துவந்த பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த இருக்கும் வெட்டுவானத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகள் நட்சத்திரா(4). சிறுமி வெட்டுவானத்தில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக நட்சத்திராவிற்கு அதிகமான காய்ச்சல் இருந்திருக்கிறது. இதன்காரணமாக அங்கிருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பெற்றோர் அனுமதித்தனர்.
undefined
ஆனாலும் காய்ச்சல் குறையாத காரணத்தினால் வேலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் சிறுமி நட்சத்திராவிற்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதன்காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தார். இருப்பினும் காய்ச்சல் குறையாத நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமி பரிதாபமாக உயிர் இழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் கதறி துடித்தனர்.
டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழந்த தகவல் வேலூர் மாவட்ட சுகாதாரத் துறைக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் டெங்கு காய்ச்சல் பரவியதன் காரணம் குறித்து விசாரணையை தொடங்கினர். சிறுமி வசித்த வீடு மற்றும் தெருக்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அந்த இடங்கள் தூய்மையாக இருந்திருக்கிறது.
இதையடுத்து நட்சத்திரா படித்த தனியார் மெட்ரிக் பள்ளியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அங்கு ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக பணியாளர்கள் மூலம் அது அகற்றப்பட்டது. பள்ளியை தூய்மையாக வைத்துக் கொள்ளாத காரணத்தால் டெங்கு கொசுக்கள் உற்பத்தி இருந்திருக்கிறது. இதற்காக அந்த தனியார் பள்ளிக்கு 1 லட்சம் அபராதம் விதித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
மேலும் பள்ளியில் பயிலும் 2 மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இந்த வருடம் வேலூர் மாவட்டத்தில் அதிகமான டெங்கு பாதிப்பு இருக்கிறது. இதுவரையிலும் 292 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.