கண் முன்னே குழந்தைகள் குளத்தில் விழுந்து பலி.. துக்கத்தில் தந்தை தற்கொலை.. ஆம்பூர் அருகே சோகம்..!

By Asianet TamilFirst Published Sep 11, 2021, 9:47 PM IST
Highlights

ஆம்பூர் அருகே கண் எதிரே மகன், மகள் குளத்தில் தவறிவிழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த துக்கம் தாங்காமல் குழந்தைகளின் தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

கிருஷ்ணகிரி ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன் (44). இவருடைய மனைவி மீனாட்சி(37). இவர்களுக்கு ஜஸ்வந்த் (8) என்ற மகனும் ஹரிபிரீத்தா (6) என்ற மகளும் உள்ளனர். ஊத்தங்கரை கள்ளூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஜஸ்வந்த் 4-ஆம் வகுப்பும், ஹரிபிரீத்தா 2-ஆம் வகுப்பும் படித்துவந்தார்கள். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடிக்கிடப்பதால், மீனாட்சியின் அம்மாவான பாட்டி வீட்டுக்கு வந்து லோகேஸ்வரன் குடும்பத்தோடு தங்கியிருந்தார். 
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, லோகேஸ்வரன் குடும்பத்துடன் ஆம்பூரை அடுத்த கைலாசகிரி மலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சென்றார்கள். அங்குள்ள குளத்தில் மீன் பிடித்தபோது குழந்தைகள் இருவரும் கால் தவறி குளத்தில் விழுந்தனர். நீச்சல் தெரியாத லோகேஸ்வரன் கஷ்டப்பட்டு மீட்டு கரைக்குக் கொண்டு வந்தார். ஆனால், தண்ணீர்ல் விழுந்ததில் மூச்சுத் திணறி குழந்தைகள் உயிரிழந்தது தெரிய வந்தது. உயிரற்ற கிடந்த குழந்தைகளின் சடலங்களைப் பார்த்து தந்தை லோகேஸ்வரனும் தாய் மீனாட்சியும் கதறி அழுத காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது.
தகவலறிந்தது வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர்  குழந்தைகளின் சடலங்களை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைகளின் உடல்களைப் பெற பிணவறைக்கு வெளியே லோகேஸ்வரனும் மீனாட்சியும் கதறியபடி இருந்தனர். குழந்தைகளின் மரணத்தால் துக்கம் தாளாமல் இருந்த தம்பதி பூச்சி மருந்து குடித்து உயிர் துறக்க முடிவெடுத்தனர். குளிர்பானத்தில் பூச்சி மருந்தைக் கலக்கிய லோகேஸ்வரன், முதலில் குடித்தார். மீனாட்சி குடிக்க முயன்றபோது அதை லோகேஸ்வரனே தட்டிவிட்டார்.
இந்தக் காட்சியைக் கண்ட அக்கம்பக்கத்தினர் லோகேஸ்வரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்தார். குழந்தைகள் மற்றும் கணவர் உயிரிழந்துவிட தப்பிய தாய் மீனாட்சி மருத்துவமனையில் வயிற்றிலும் வாயிலும் அடித்து அழுதது கல் நெஞ்சையும் கரைய வைத்தது. இந்த மூன்று மரணம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக இழந்த மீனாட்சியை அவரது உறவினர்கள் மீட்டு வீட்டுக்கு அழைத்துச்சென்றனர்.
 

click me!