விபத்தில் இறந்த நாயின் வயிற்றில் துடித்த குட்டிகள்..! அறுவை சிகிச்சையில் காப்பாற்றப்பட்ட அதிசயம்..!

By Manikandan S R S  |  First Published Feb 19, 2020, 4:06 PM IST

நாயை பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள் அதன் வயிற்றில் குட்டிகள் இருப்பதை கண்டறிந்தனர். அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அது பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் நாயின் வயிற்றில் இருக்கும் குட்டிகளை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். 


வேலூரில் இருக்கும் மக்கான் சிக்னல் அருகே ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றது. நேற்று முன்தினம் காலை, தெருநாய் ஒன்று அந்த சாலையை கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்த வழியாக அதிவேகத்தில் வந்த கார் தெருநாய் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட நாய், படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.

Tap to resize

Latest Videos

undefined

ரத்த வெள்ளத்தில் நாய் துடித்துக்கொண்டிருக்க பலர் அதைக்கடந்து சென்ற நிலையில் வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த தண்டபாணி என்பவர் நாயின் மீது இரக்கம் கொண்டு அதை காப்பாற்ற முயன்றார். அவரை பார்த்து மேலும் சிலரும் உதவ முன்வந்தனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நாயை மீட்ட அவர்கள் அருகே இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நாயை பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள் அதன் வயிற்றில் குட்டிகள் இருப்பதை கண்டறிந்தனர். அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அது பரிதாபமாக உயிரிழந்தது.

2 தலை.. 4 கண்கள்..! அதிசய தோற்றத்துடன் கன்றை ஈன்ற பசுமாடு..!

இதையடுத்து நாயின் வயிற்றில் இருக்கும் குட்டிகளை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். உடனடியாக அவரச அறுவை சிகிச்சை மூலம் நாயின் வயிற்றில் இருந்த 5 குட்டிகள் பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டன. அவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பாட்டில் பால் கொடுக்கப்பட்டது. பின் உயிருக்கு போராடிய நாயை மருத்துவமனைக்கு கொண்டு வந்த தண்டபாணியே 5 குட்டிகளையும் தனது வீட்டிற்கு எடுத்து சென்றார்.

சாலையில் அடிபட்டு கிடப்பது நாய் தான் என்றில்லாமல், அதற்கு சிகிச்சை அளித்ததில், 5 குட்டிகள் காப்பாற்றப்பட்ட சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

click me!