என் ஆசை அப்பா குடிப்பதை நிறுத்தவும்... 16 வயது சிறுமி தற்கொலைக்கு முன் எழுதிய உருக்கமான கடிதம்

By SG Balan  |  First Published Jun 4, 2023, 4:49 PM IST

தந்தை குடிபோதையில் அட்டூழியம் செய்துவந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான 16 வயது சிறுமி தந்தை புத்திசொல்லி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கியிருக்கிறார்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தந்தை மதுபோதையில் வீட்டில் ரகளை செய்துவந்ததைத் தாங்க முடியாமல் தவித்து வந்த சிறுமி உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சின்னராஜா குப்பம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி விஷ்ணு பிரியா. கூலித் தொழிலாளியான இவரது தந்தை மது போதைக்கு அடிமையாகி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சண்டை போடுவதை வாடிக்கையாகச் செய்துவந்திருக்கிறார். தந்தையின் போதை அடாவடிகளைக் கண்டுவந்த சிறுமி பெரிய மன உளச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.

Tap to resize

Latest Videos

undefined

முதலில் சிறுமி விஷ்ணுபிரியா தந்தையைத் திருத்திவிடும் நம்பிக்கையுடன், இனிமே குடிக்க வேண்டாம் என்று தந்தையிடம் பல முறை கெஞ்சிக் கேட்டிருக்கிறார். ஆனால், குழந்தையின் கண்ணீருக்குக் கூட மனம் கரையாத அளவுக்கு போதை அடிமையாக மாறி இருந்த தந்தை தொடர்ந்து குடியும் கும்மாளமுமாக இருந்திருக்கிறார்.

தந்தையின் குடிப்பழக்கம் காரணமாக வீட்டில் நடக்கும் பிரச்சினைகளைப் பார்த்துவந்த சிறுமி விஷ்ணுபிரியா, கடைசியில் வேறு வழி தெரியாமல் தற்கொலை முடிவுக்கு வந்திருக்கிறார். ஆனால், குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட அந்தச் சிறுமி, இறப்பதற்கு முன் ஒரு உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

அதில், தனது தந்தை குடிப்பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்றும் குடும்பம் எப்போது மகிழ்ச்சியாக இருக்கிறதோ அப்போதுதான் தனது ஆத்மா சாந்தி அடையும் என்றும் எழுதி இருக்கிறார். இந்தக் கடிதத்தை எழுதி வைத்த சிறுமி விஷ்ணுபிரியா வீட்டில் யாருக்கும் தெரியாமல் தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுவிட்டார். சிறுமி விஷ்ணு பிரியாவின் மரணம் அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி ஊர்மக்களையும் சோகத்தில் ஆழ்ந்தியுள்ளது.

click me!