மதுபோதையில் வாகனத்தை ஓட்டிய பாலமுருகன் இன்றும் நாளையும் திருச்சி நீதிமன்றம் அருகே இருக்கும் எம்ஜிஆர் சிலை ரவுண்டானா அருகே போக்குவரத்து போலீசாருடன் இணைந்து ட்ராபிக்கை சீர்செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என நீதிபதி ஷகிலா உத்தரவிட்டார்.
திருச்சியில் இருக்கும் கே.கே நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன்(19) . கடந்த 2018ம் ஆண்டு மதுபோதையில் 5 பேருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவரை பிடித்த போக்குவரத்து காவலர்கள் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர். அப்போது பாலமுருகனுக்கு 17 வயது என்பதால் இது தொடர்பான வழக்கு இளம் சிறார் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்தநிலையில் தற்போது இந்த வழக்கில் புது வித தண்டனையை நீதிபதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
தீர்ப்பில், மதுபோதையில் வாகனத்தை ஓட்டிய பாலமுருகன் இன்றும் நாளையும் திருச்சி நீதிமன்றம் அருகே இருக்கும் எம்ஜிஆர் சிலை ரவுண்டானா அருகே போக்குவரத்து போலீசாருடன் இணைந்து ட்ராபிக்கை சீர்செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என நீதிபதி ஷகிலா உத்தரவிட்டார். அதுதொடர்பான அறிக்கையை போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதியின் உத்தரவுப்படி பாலமுருகன் திருச்சி எம்ஜிஆர் சிலை பகுதியில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளார். இருநாட்களிலும் காலை முதல் மாலை வரை அவர் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து இப்பணியை மேற்கொள்ள உள்ளார். இதை சமூக ஆர்வலர்கள் பலர் வரவேற்றுள்ளனர். தற்போது சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நீதிபதியின் புதுவித தண்டனை வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
Also Read: ஓ.பி.எஸ் மகன் கார் மீது சரமாரி தாக்குதல்..! தேனியில் பரபரப்பு..!