மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நாடுமுழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இருக்கும் மங்களூரு விமான நிலையத்தில் பை ஒன்று அனாதையாக கிடந்தது. அதை விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றி சோதனை செய்த போது, 3 வெடிகுண்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் வெடிகுண்டு செயலிழக்க செய்யப்பட்டது. இதனால் அங்கு பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. அத்துடன் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
மங்களூரு விமானநிலையத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதிலும் அனைத்து விமான நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருக்கும் விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வருகை தரும் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்னர். தலைநகர் சென்னையில் இருக்கும் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதே போல மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே மங்களூரு விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டை வைத்து சென்றது தெரிய வந்திருக்கிறது. ஆட்டோவில் வந்த அந்த நபர் விமான நிலைய வளாகத்தில் பையை வைத்து சென்றுள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. அதை வைத்து மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குடியரசு தினம் நெருங்கி வரும் நிலையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Also Read: தனியாக கழண்டு ஓடிய சொகுசு பேருந்து டயர்..! பயங்கர அதிர்ச்சியுடன் உயிர் தப்பிய பயணிகள்..!