ராமஜெயம் கொலை வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்படுமா? 12 ரவுடிகள் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்..!

By vinoth kumar  |  First Published Nov 1, 2022, 11:38 AM IST

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை திருச்சி தில்லைநகரில் உள்ள தனது வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். 


அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 12 ரவுடிகள் திருச்சி  நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை திருச்சி தில்லைநகரில் உள்ள தனது வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை கட்டுக்கம்பியால் கட்டி திருச்சி-கல்லணை ரோட்டில் பொன்னிடெல்டா பகுதியில் காவிரி ஆற்று கரையோரம் வீசி சென்று இருந்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- சுவாதி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ராம்குமார் மரணம்.. மீண்டும் சுதந்திரமாக விசாரிக்க உத்தரவு

 திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் 12 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடினார்கள். ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. 5 ஆண்டுகள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தியும் வழக்கில் முன்னேற்றம் இல்லை. பின்னர் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

ஆனாலும் கொலையாளிகள் யார்? என்பது தெரியாததால் நீதிமன்ற உத்தரவுப்படி ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு துலக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு மதன், சி.பி.ஐ. அதிகாரி ரவி ஆகியோர் அடங்கிய இந்த சிறப்பு புலனாய்வுக்குழுவில் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் இடம் பெற்று இருந்தனர். சிறப்பு புலனாய்வுக்குழு பல மாதங்களாக நடத்திய விசாரணையில் குறிப்பிட்ட மாடல் காரில் ராமஜெயத்தை கடத்தி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக அதே மாடல் கார்களை தமிழகம் முழுவதும் பயன்படுத்தி வந்த உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் என 1,500-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பிரபல ரவுடிகளிடமும் விசாரணை நடத்தினார்கள்.

இதில் சந்தேகத்துக்குரிய 20 ரவுடிகளிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. இவர்களில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார் திட்டமிட்டனர். இதற்காக திருச்சியை சேர்ந்த சாமிரவி, திண்டுக்கல்லை சேர்ந்த மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து, சத்யராஜ், தினேஷ், திலீப், தென்கோவன், ராஜ்குமார், சிவா, சுரேந்தர், கலைவாணன் ஆகிய 12 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. 

இதனை தொடர்ந்து  12 பேரும்  இன்று காலை திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 6-ல் ஆஜராக வேண்டும் தெரிவித்து இருந்தனர்.  மேலும்  அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த ஆட்சேபனை இருப்பின் அதை கோர்ட்டில் தெரிவிக்கலாம் என்றும் அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ராமஜெயம் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தியபோது, 2 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினார்கள். அதில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தற்போது பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் 12 பேரிடம் அதிரடியாக உண்மை கண்டறியும் சோதனை நடத்த இருப்பதால் வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

இதையும் படிங்க;- ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளியை நெருங்கிய போலீஸ்? பிரபல ரவுடிகள் 12 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை.!

click me!