தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பநிலை உயர்ந்து வருவதால் வெப்ப சலனம் உருவாகி மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் நிலையில் கோடை வெயில் ஏற்படுத்திய வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் மழை குளிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மைய அதிகாரி புவியரசன் கூறும்போது, தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பநிலை உயர்ந்து வருவதால் வெப்ப சலனம் உருவாகி மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அதன்படி தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார். பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் கூறியிருக்கிறார்.
நேற்றைய நிலவரப்படி கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் 3 செமீ, கலியார், சித்தார் ஆகிய இடங்களில் 2 செமீ மழை பெய்துள்ளது. மேலும் அடுத்து வரும் நாட்களில் திருச்சி, மதுரை, விருதுநகர், சேலம்,கரூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், திருத்தணி ஆகிய பகுதிகளில் வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை தொடும் எனவும் வானிலை மைய அதிகாரி குறிப்பிட்டிருக்கிறார்.