உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இன்று உச்சகட்டமாக இந்தியாவில் 10 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. இதுவரையில் 339 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு தற்போது மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டு மே 3ம் தேதி வரை தொடரும் என பிரதமர் மோடி இன்று காலை அறிவித்தார்.
மேலும் ஏப்ரல் 20ம் தேதி வரை ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் அதன் பிறகு பாதிப்பு குறைவாக இருக்கும் இடங்களில் ஊரடங்கு சிறிய அளவில் தளர்த்தி கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே 10 மாநிலங்களில் இம்மாத இறுதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது பிரதமர் மே 3ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு நீடிக்கும் என்று அறிவித்திருக்கிறார். ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் இருக்கும் கடைகள், வணிக வளாகங்கள், பொது போக்குவரத்துகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்து வகையிலான சேவைகளும் நிறுத்தப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர்.
அந்த வகையில் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் பாடு பெரும் திண்டாட்டம் ஆகியிருக்கிறது. சில இடங்களில் சட்டவிரோதமாக பதுக்கி மது விற்றும், கள்ளச்சாராயம் காய்ச்சியும் பலர் காவலர்களால் கைதாகி வருகின்றனர். இந்த நிலையில் அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்க அம்மாநில அரசுகள் உத்தரவிட்டன. அதுபோல தமிழகத்திலும் மதுக்கடைகள் திறக்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு குடிமகன்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் அதுபோன்று தமிழகத்தில் நடைமுறைபடுத்த இயலாது என அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் பிர்லோஷ்குமார் கூறும்போது, தற்போது ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மதுக்கடைகளும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்றும் மதுக்கடைகளை திறக்க வாய்ப்பு இல்லை எனவும் கூறியுள்ளார். அதே போல தமிழ்நாடு மாநில வாணிப கழகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பிலும் கடைகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.