மருத்துவர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளி..! திருச்சியில் பரபரப்பு..!

By Manikandan S R SFirst Published Apr 12, 2020, 12:48 PM IST
Highlights

திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவர்கள் மீது எச்சில் துப்பியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. 

இந்தியாவை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் நோய் தமிழகத்தில் அசுர வேகம் எடுத்திருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்பு எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 58 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டு 969 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு ஏற்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்திலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி திருச்சியில் 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவர்கள் மீது எச்சில் துப்பியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. திருச்சியைச் சேர்ந்த அந்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவரை பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவரை தனிமை சிகிச்சையில் வைத்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே அவரது மனைவி வீட்டில் இருந்து பிரியாணி செய்து கணவருக்காக கொண்டு வந்ததாகவும் ஆனால் கொரோனா தடுப்பு பிரிவில் இருக்கும் அவர் பிரியாணி சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் அணிந்திருந்த முக கவசத்தை தூக்கி எறிந்து ரகளையில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் பணியில் இருந்த மருத்துவர்களை பயமுறுத்தும் விதமாக அவர்கள் மீது எச்சில் துப்பி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் காவலர்களுக்கு தகவல் அளித்தனர். அதன்படி விசாரணை மேற்கொண்டிருக்கும் திருச்சி அரசு மருத்துவமனை காவல்துறை சம்பந்தபட்ட கொரோனா நோயாளி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளது.

கொரோனா நோய் பரவாமல் இருக்க தும்மும் போதும் இருமும் போதும் அருகே இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என அறிவுருத்தப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவர்கள் மீதே எச்சில் துப்பிய சம்பவம் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

click me!