சூப்பர் நியூஸ்..! திருச்சியில் 32 சேலத்தில் 16 பேர் பூரண நலம்..! 48 பேரும் வீடு திரும்பினர்..!

By Manikandan S R S  |  First Published Apr 16, 2020, 11:14 AM IST
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 32 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் மாவட்ட ஆட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் சேர்ந்து பழவகைகள் வழங்கி வாழ்த்தி வழி அனுப்பி வைத்துள்ளனர்.

நாடு முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி 1,242 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப் படுத்தப்பட்டிருக்கும் நிலையில் 14 பேர் மரணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தபட்டுள்ளன.

இதனிடையே நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 37 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் 118 பேர் இதுவரையில் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வீடு திரும்பி இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 32 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் மாவட்ட ஆட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் சேர்ந்து பழவகைகள் வழங்கி வாழ்த்தி வழி அனுப்பி வைத்துள்ளனர்.

திருச்சியில் இதுவரை 43 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முதலில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் கடந்த 10ம் தேதி பூரண நலம் பெற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது மருத்துவ பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த வியாழக்கிழமை அனைவரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதே போல சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்த 16 பேர் நலம் பெற்று வீடு திரும்பி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிஸ்சார்ஜ் ஆன அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  அவர்கள் தொடர்ந்து 14 நாட்களுக்கு தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
click me!