திருச்சி அருகே மின்சாரம் தாக்கிய மனைவியை காப்பாற்ற சென்றதில் கணவனும் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இருக்கிறது தாரானுர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் மகேந்திரன்(36). இவரது மனைவி சந்தியா(30). இந்த தம்பதியினருக்கு சந்தோஷ்(4), சர்வேஷ்(3) என்று இரு மகன்கள் இருக்கின்றனர்.
undefined
இந்த நிலையில் சந்தியா நேற்று வீட்டு வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். அவரது கணவர் மகேந்திரன் வீட்டின் உள்ளறையில் இருந்துள்ளார். தற்போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மகேந்திரன் வீட்டில் இருக்கும் மின்சாரம் செல்லும் எர்த் வயரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதையறியாமல் சந்தியா அந்த பகுதிக்கு சென்ற பொது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சந்தியா அலறி துடிக்கவே அவரது கணவர் மகேந்திரன் ஓடி வந்துள்ளார். மனைவியை காப்பாற்ற முற்பட்ட போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இரண்டு பேரையும் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சியடைந்த மகேந்திரனின் அண்ணன் சக்திவேல் அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. அவரை உறவினர்கள் பத்திரமாக மீட்டனர். ஆனால் மகேந்திரனும் சந்தியாவும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த லால்குடி காவலர்கள் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.
வீட்டில் மின்சாரம் பாய்ந்ததால் கணவனும் மனைவியும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.