
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் (67) மற்றும் அவரது மனைவி செண்பகவல்லி (65) ஆகியோர் தங்களது இரண்டு மகள்களுடன் கடந்த 10ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு வருகை தந்தனர். பின்னர் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான யாத்திரி நிவாஸில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர்கள் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து ஊழியர்கள் அந்த அறையின் கதவை பலமுறை தட்டியும் திறக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அப்போது அங்கு கணவன், மனைவி மற்றும் அவர்களது இரண்டு மகள்கள் என மொத்தம் 4 பேரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனையடுத்து 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், மனநலம் பாதிக்கப்பட்ட இரு மகள்களை கவனித்துக் கொள்ள ஆள் இல்லாததால் இந்த விபரீத முடிவை எடுத்தாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.