
சமயபுரம் மாரியம்மன் கோவில்
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் திருச்சியில் புதிய சொகுசு ஒன்றை வாங்கியுள்ளார்.
புதிய காருக்கு பூஜை போட்ட இடத்தில் விபரீதம்
இதனையடுத்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பூஜை செய்வதற்காக எடுத்துச் சென்றுள்ளார். காரை தெற்கு வாசல் அருகே பக்தர்கள் செல்லும் நடைபாதையில் நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்ற அவர் சாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக காரை ரிவர்ஸ் எடுத்துள்ளார். அப்போது தெற்கு வாசல் அருகே நடைபாதை ஒரத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த பக்தரின் தலையின் மீது சொகுசு கார் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் பக்தர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணை
சம்பவ இடத்திற்கு விரைந்த சமயபுரம் போலீசார் உயிரிழந்த பக்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த விவரம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கார் உரிமையாளரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொகுசு கார்கள் நிறுத்திவதற்கு தனியாக கார் பார்கிங் வசதி உள்ள நிலையில் இதுபோன்ற வாகனங்களை கோவில் பிரகாரம் வழியாக அனுமதிக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.