கூர்காவிடம் சாவி இருக்கிறது என்பதற்காக அலுவலகம் அவருக்கு சொந்தமாகி விடுமா? கு.ப. கிருஷ்ணன் ஆவேசம்!!

By Dhanalakshmi GFirst Published Sep 17, 2022, 3:28 PM IST
Highlights

திருச்சி: கூர்காவிடம் சாவி இருக்கிறது என்பதற்காக அலுவலகம் அவருக்கு சொந்தமாகி விடுமா என்று  முன்னாள் அமைச்சர் கு.பா.கிருஷ்ணன் ஆவேசமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

பெரியாரின் 144-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்களும்,முன்னாள் அமைச்சர்களுமான வெல்லமண்டி நடராஜன், கு.பா.கிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் திருச்சி அண்ணா நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன் மற்றும் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் கூறுகையில், ''சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர் அறிவித்தபோது, அந்த திட்டத்தை நீக்க முடியாமல்  இவருடைய (உதயநிதி ஸ்டாலின்)  பாட்டனார் முட்டையுடன் சத்துணவு கொடுத்தார். மீண்டும் நினைவுபடுத்தும் அவல நிலைக்கு வந்துள்ளேன். பிள்ளைகளை பிச்சை எடுக்க வைத்துள்ளார், கையேந்த வைத்துள்ளார், இந்தத் திட்டத்திற்கு எந்த ஒரு நிதியும் ஒதுக்காமல் இந்த திட்டம் எப்படி செயல்படுத்த முடியும் என அப்போது முதல்வர் எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்தார்கள்.

அப்போது எம்ஜிஆர் பிச்சை எடுத்தாவது இந்த திட்டத்தை நடத்துவேன் என்று அன்று சூளூரைத்தார்கள். ஓராண்டு காலம் சிறப்பான முறையில் திட்டத்தை செயல்படுத்தி உலக நாடுகள் பாராட்டி இந்த திட்டத்தை உலகம் முழுவதும் கொண்டு வந்தார்கள் என்பதை யாரும் மறக்க வேண்டாம். 

சென்னை துறைமுகம் வந்த அமெரிக்க போர்கப்பல்.. வாயை பிளக்க வைக்கும் USCGC Midgett யின் அம்சங்கள்..

சத்துணவு திட்டத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்த காரணத்தினால் தான் இவர்கள் காலத்தில் சத்துணவோடு சேர்த்து முட்டை வழங்கினார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்த அளவில் ஓ பன்னீர்செல்வம் தான் ஒருங்கிணைப்பாளர் என்று தான் தற்பொழுது வரை தேர்தல் ஆணையத்தில் உள்ளது.

பொதுச் செயலாளர் தேர்தலுக்கான களப்பணிகளில் நாங்கள் தற்பொழுது ஈடுபட்டு வருகிறோம்.. மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவுரை கூறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால்  எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒன்றும் தெரியவில்லை என்று நான் கருதுகிறேன்'' என்றார்.

செய்தியாளர்கள், அதிமுக அலுவலக சாவி எடப்பாடியிடம் தானே இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கு.ப. கிருஷ்ணன், ''ஜெயில் சாவி கூர்காவிடம் இருக்கு என்பதால் அவருக்கு சொந்தமாகி விடுமா... சாவி மட்டும் தான் அவரிடம் உள்ளது. அதிமுக அலுவலகம் அனைவருக்கும் சொந்தம்'' என்றார். .

வைத்தியலிங்கம் சசிகலா சந்திப்பு குறித்த கேள்விக்கு, அது ஒரு இயல்பான ஒரு சந்திப்பு'' என்றார். 

2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட மோடி வெற்றி? எந்த மாவட்டம் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்.

கட்சி அலுவலகத்தில் ஓபிஎஸ் படம் நீக்கியது குறித்த கேள்விக்கு?, ''ஒரு வீட்டை வெள்ளை அடித்து தான் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பார்கள். அந்தப் பணிகளை தான் தற்பொழுது அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். விரைவில் எங்கள் அலுவலகம் எங்கள் கைக்கு வந்து விடும். அதன் பிறகு அனைத்தும் சரி செய்யப்படும்.

பொதுச் செயலாளர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடட்டும் தொண்டர்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களை அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். அதிமுக சட்ட விதிப்படி இடைக்காலம் என்பதே கிடையாது. ஆகையால் இடைக்கால பொதுச் செயலாளர் என்பதும் செல்லாது. அப்படி ஒன்று கிடையவே கிடையாது. அப்படி ஒன்று இருந்தால் சசிகலா இப்போது இடைக்காலப் பொதுசெயலாளர் தானே. எதிர்காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அந்த பதவியோடு நடத்துவோம்.

அதிமுக ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட  கட்சி. கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்று எம்ஜிஆர் சட்ட விதிகளை உருவாக்கி வழங்கி உள்ளார். அதன்படியே நாங்கள் பயணிப்போம்.  எம்ஜிஆரையோ ஜெயலலிதாவையோ எதிர்த்து நிற்க யாரும் அப்போது இல்லை. அதனால் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள். ஆனால் அப்படிப்பட்ட வல்லமை படைத்த தலைவர்கள் இப்பொழுது யாரும் இல்லை. 

ஆகையால் தேர்தல் மூலமாக தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவரால் மட்டுமே அதிமுகவை வழி நடத்த முடியும். அதிமுகவின் சட்ட விதிகளின்படி தேர்தல் நடத்த வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால் அவர்கள் நினைக்கவில்ளை. அவரும் (எடப்பாடி பழனிச்சாமி) வருவார் என்று எதிர்ப்பார்க்கிறோம். எம்ஜிஆர் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம் இபிஸ் அவருடைய வழியில் செல்ல வேண்டும் என்று நினைத்தால் செல்லட்டும். பின்னர் மீண்டும் திரும்பி வருவார்'' என்றார்.

click me!