திருச்சி ஸ்ரீ ரங்கம் கோவிலில் இருந்த தென்னை மரங்கள் நூற்றுக்கணக்கில் வெட்டப்பட்டதால் பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அர்ச்சகர் ரங்கராஜன் என்பவர் முகநூலில் பதிவிட்ட நிலையில் அவர்மீது கோவில் நிர்வாகம் அவதூறு வழக்கு தொடுத்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் இருக்கிறது ஸ்ரீரங்கம். இங்கிருக்கும் ரங்கநாத பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். இதனிடையே ரங்கநாதர் கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும், அங்கிருக்கும் அதிகாரிகள் ஆகம விதிகளை மீறி செயல்படுவதாகவும் அவ்வப்போது புகார் எழுந்து வந்தது.
undefined
இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக கோவிலைச் சுற்றி இருக்கும் நான்கு உத்தரவீதிகளிலும் இருந்த 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் கோவில் நிர்வாகம் மூலம் வெட்டி சாய்க்கப்பட்டன. இதுகுறித்து கோவில் அறங்காவலர்கள் கூறும்போது, பட்டுப்போன தென்னை மரங்களில் இருந்து மட்டைகள் அவ்வப்போது கீழே விழுந்து பக்தர்களுக்கும், வாகனங்களுக்கும் சேதம் ஏற்படுவதாகவும் அதன்காரணமாக ஸ்ரீரங்கம் வட்டாச்சியர் மற்றும் கோட்டாட்சியரின் உத்தரவுபடி கோவிலைச் சுற்றி இருந்த பயனற்ற 116 தென்னை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என்று கூறியுள்ளனர்.
ஆனால் இதைமறுத்த பக்தர்கள் சிலர், பட்டுப்போன மரங்களோடு சேர்த்து பல உயிருள்ள தென்னை மரங்களையும் வெட்டி , அதை ஏலம் விட்டு பணம் சம்பாதிப்பதாக அறங்காவலர்குழு அதிகாரிகள் மீது புகார் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கநாத நரசிம்மன்(49) என்பவர் முகநூலில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து அவர்மீது கோவில் நிர்வாகத்தை அவதூறாக விமர்சித்ததாகவும், மத உணர்வுகளை தூண்டும் வகையில் சமூக ஊடங்களில் கருத்துகளை பதிவிட்டு வருவதாகவும் அறங்காவலர்கள் சார்பாக புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
ஏற்கனவே ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவர் ரெங்கநாதர், உற்சவர் நம்பெருமாள் உள்ளிட்ட சிலைகள் போலியானவை என்றும் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் ரங்கநாதன் முகநூலில் பதிவிட்டு இருந்ததால் அவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அவரை கைது செய்ய மறுத்து மறுத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 20 ஆண்டுகளுக்கு பின் உயிர்பெற்ற ஆத்துப்பாளையம் அணை..! அமைச்சரின் தீவிர முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு..!