தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு புதிய திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

By Manikanda PrabuFirst Published Feb 25, 2024, 1:05 PM IST
Highlights

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கான புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
 

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது. இதில் குறிப்பாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் இந்த அதி கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டதால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும், பொது மற்றும் தனியார் கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் அதி கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் நிகழ்ச்சியில், மொத்தம் 2,21,815 பயனாளிகளுக்கு ரூ.423.95 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழக அரசு மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளால்தான் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அடிப்படை வசதிகள் விரைவாக சரி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார்கள்.” என்றார். மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட மழை, வெள்ள நிவாரண பணிகள், நிதி உதவிகள்,  அம்மாவட்டங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ள தொழில் முதலீடுகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்டார்.

அத்துடன், தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்களுடைய நலன் கருதி, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் சில அறிவிப்புகளையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன்படி, “விளாத்திகுளம் வட்டம், வேம்பாரில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "வேம்பார் பனைப்பொருட்கள் குறுங்குழுமம்" அமைக்கப்படும். கோவில்பட்டி பகுதியில 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "கோவில்பட்டி கடலைமிட்டாய் குறுங்குழுமம்" அமைக்கப்படும். இந்தக் குழுமத்துக்கான பொது வசதி மையத்தில் மூலப்பொருட்களை தரம் பிரிக்கின்ற வசதி, தானியங்கி பேக்கிங் கூடங்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான கண்காட்சி கூடம் ஆகியவை அமைக்கப்படும். தூத்துக்குடியில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் 50 ஆயிரம் சதுர அடியில் வர்த்தக வசதிகள் மையம் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.” ஆகிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

மான் கி பாத் 110ஆவது எபிசோடில் பேசிய பிரதமர் மோடி!

அதேபோல், நெல்லை மாவட்டத்துக்கு, “அம்பாசமுத்திரத்திற்கு புதிய மருத்துவமனை கட்டடம், வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகியவை அமைக்கப்படும். அம்பாசமுத்திரம் புறவழிச் சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்த கண்டியபேரி அரசு மருத்துவமனை பணிகள் நிறைவடையும் நிலையில் இருக்கிறது. அது விரைவில் திறக்கப்பட இருக்கிறது. மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதி கனமழையால் பெரிய பாதிப்பை அடைந்திருக்கின்ற மாஞ்சோலை சாலை 5 கோடியே 4 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும். திருநெல்வேலி மாநகருக்கான மேற்கு புறவழிச் சாலை பணிகளுக்கான திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் இருக்கிறது.” ஆகிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த திட்டங்களுக்கான நிர்வாக அனுமதி விரைவில் வழங்கப்பட்டுப் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார். “இரண்டு மாபெரும் இயற்கை பேரிடர்களை கடந்த டிசம்பர் மாதம் சந்தித்தோம். இதனால், ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய ஒன்றிய அரசிடம் 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை நாம் கேட்டோம். ஒன்றிய அரசிடமிருந்து நிதி வரவில்லை என்பது மட்டும் இல்லை; தேர்தல் வரப்போகிறதே வாக்கு கேட்டு தமிழ்நாட்டு மக்களை சந்திக்க வேண்டும் என்ற பயம். கொஞ்சம் கூட இல்லாமல் ஒன்றிய அரசும், நிதிஅமைச்சரும் பாராமுகமாக இருக்கிறார்கள்.” என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் வின்ஃபாஸ்ட் ஆட்டோ நிறுவனத்தின் 16,000 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டத்தின் முதற்கட்டமாக 4000 கோடி ரூபாய் முதலீட்டில் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மின் வாகன உற்பத்தி ஆலை அமைக்கும் பணிக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

click me!