தூத்துக்குடியில் காவல்துறை வாகனத்தில் அமர்ந்து டிக் டாக் வீடியோ செய்து வெளியிட்ட 3 இளைஞர்களை பிடித்து காவல்துறையினர் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.
தற்போது டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு பிரபலமாகுவது என்பதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர். தங்கள் திறமையை வெளிப்படுத்தி சிலர் முன்னேறி வந்தாலும் டிக் டாக் பல சமூக முறைகேடுகளுக்கு வித்திட்டு வருகிறது. சாதி ரீதியாக வரும் காணொளிகள் பல கொலைகள் வரை சென்றுள்ளது. காவல்துறையை கேலி செய்து காணொளி வெளியிடும் நபர்களை காவலர்கள் கைது செய்து எச்சரிக்கை செய்வதும் நடந்திருக்கிறது. இதனால் டிக் டாக் செயலி அண்மையில் தடை செய்யப்பட்டது. எனினும் மீண்டும் அது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்தநிலையில் தூத்துக்குடியில் காவல்துறை வாகனத்தில் அமர்ந்து டிக் டாக் வீடியோ செய்து வெளியிட்ட 3 இளைஞர்களை பிடித்து காவல்துறையினர் நூதன தண்டனை வழங்கியுள்ளனர். தூத்துக்குடி அருகே இருக்கும் லெவஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் ஷேகுவாரா, சீனு, கோகுலகிருஷ்ணன். மூன்று பேரும் சேர்ந்து காவல்துறை வாகனத்தில் அமர்ந்து பாடல் ஒன்றுக்கு நடித்து அதை டிக் டாக்கில் வெளியிட்டுள்ளனர். அதில், 'தூத்துக்குடி காரணனுங்கம்மா.. தூக்கிட்டானுங்கம்மா'.. என்றும் 'பத்து பேரு சுத்தி வளைச்சாலும் எங்க பலம் குறைஞ்சதில்ல'.. என்றும் நடித்துள்ளனர்.
இந்த காணொளி வைரலாக பரவி காவல்துறையினர் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து மூன்று பேரையும் பிடித்த தூத்துக்குடி காவலர்கள் எச்சரிக்கை செய்தனர். பின்னர் அவர்களுக்கு அறிவுரை வழங்கி நூதன தண்டனை ஒன்று வழங்கியுள்ளனர். தூத்துக்குடி மார்க்கெட் சிக்னல் பகுதியில் நின்று மூன்று இளைஞர்களையும் 8 மணி நேரம் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் காவல்துறை ஈடுபடுத்தியது. மேலும் இதுபோன்று யாரும் காணொளி வெளியிட வேண்டாம் எனவும் அவர்கள் பேசிய விடியோவும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.