திருச்செந்தூர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் நேற்று இரவு மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 9 ம் தேதி தொடங்கி 16 ம் தேதி நிறைவடைந்தது. தகுதி பெற்ற வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இருநாட்களிலும் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
undefined
வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் திடீரென நேற்று மரணமடைந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட மேலதிருச்செந்தூர் ஊராட்சிக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தலைவர் பதவிக்கு இந்த பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்பவர் போட்டியிட்டிருந்தார்.
தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த அவர், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். தேர்தல் நாளன்று ஆர்வமுடன் வாக்களித்து முடிவுகளுக்காக காத்திருந்தார். இந்தநிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த பேச்சியம்மாளுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவருக்கு இன்று இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது. பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.