தூத்துக்குடியில் நேற்று பெய்த கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் இருக்கும் முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வந்தது. வரும் 17 ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது.
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. வெப்பச்சலனம் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று ஒரு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. நேற்று இரவு முதல் தொடர் கனமழை பெய்துவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.