பழுது சரி செய்யப்பட்டு நேற்று முதல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கியுள்ளது.
கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, தனியார் தொழிற்சாலைகள் மூலம் அதனை உற்பத்தி செய்து கொடுக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தில் நிலையத்தில் ஆக்ஸிஜன் தயாரிக உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து தமிழக அரசும் அனுமதி அளித்தது.
கடந்த 12ம் தேதி நள்ளிரவு முதல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கப்பட்ட நிலையில், அங்கிருந்த ஆக்ஸிஜன் தயாரிப்பு கூடத்தில் உள்ள குளிர்விப்பானில் ஏற்பட்ட பழுது காரணமாக மறுநாளே உற்பத்தி நிறுத்தப்பட்டது. 3 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்ததால் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 3 நாட்களில் பாதிப்பு சரி செய்யப்படும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பழுது சரி செய்யப்பட்டு நேற்று முதல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கியுள்ளது. ஸ்டெர்லைய் ஆலையில் 500 டன் மற்றும், 550 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு பிரிவில் முதற்கட்டமாக 35 டன் திரவ ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று முதல் ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகள் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.