ஆக்ஸிஜன் தயாரிப்பு கூடத்தில் உள்ள குளிர்விப்பானில் ஏற்பட்ட பழுது காரணமாக நள்ளிரவு முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெருகி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்க இந்தியாவில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகள் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரியது. இதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, தமிழக அரசும் ஆக்ஸின் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் திறக்க அனுமதி அளித்தது.
அதற்காக கண்காணிப்பு குழு ஒன்றையும் தமிழக அரசு நியமித்தது. நேற்று முன்தினம் இரவு முதல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கியது. பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 5 டன் ஆக்ஸிஜன் அரசு நேற்று நெல்லையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
ஆக்ஸிஜன் தயாரிப்பு கூடத்தில் உள்ள குளிர்விப்பானில் ஏற்பட்ட பழுது காரணமாக நள்ளிரவு முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது குளிர்விப்பான் இயந்திரத்தைப் பழுது நீக்கும் பணியில் அங்குள்ள பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்ததால் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. இயந்திரத்தை சரி செய்து, மீண்டும் உற்பத்தியை தொடங்க 2 முதல் 3 நாட்கள் வரை ஆகும் என்பதால், அடுத்த 3 நாட்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்படும் என ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.