முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடி புகழ்ந்து பேசிய நிலையில், அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் நாடு என்ன வளர்ச்சி கண்டுள்ளது என்பது குறித்து பிரதமர் குறிப்பிடவில்லை. தமிழகத்தில் பாஜக கொள்கையை பேசி கட்சியை வளர்க்க முயற்சி செய்யவில்லை. மாறாக ஆட்சியில் இருக்கும் கட்சி, கூட்டணி கட்சிகளை விமர்சித்து கட்சியை வளர்க்கின்றனர்.
undefined
பிரதமர் மோடி தன்னை நம்பவில்லை, தன் செல்வாக்கை நம்பவில்லை. தன் மீது மக்கள் கொண்டுள்ள நன்மதிப்பை நம்பவில்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதாவை நம்பி தான் அரசியல் செய்கின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதாவை பற்றி கூறுவது அதிமுகவினர் பாஜக பக்கம் செல்வார்கள் என்பதற்காக தான் பேசுகிறார். அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய பிரதமர், தான் பிரதமர் என்பதை மறந்து விட்டு அது அரசியல் என்பதை மறந்து விட்டு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மேடையில் இருக்கும் போது திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். அரசியல் பிரசார மேடையாக மாற்றிக் கொண்டுள்ளார். மக்களவையில் அவர் கடைசியாக ஆற்றிய உரையும் அப்படித்தான் உள்ளது. அரசு விழாவை அரசியல் மேடையாக பயன்படுத்தியது அவருடைய பொறுப்புக்கு அழகல்ல. எத்தனை முறை பிரதமர் தமிழகத்திற்கு வந்தாலும் சுழன்று சுழன்று பரப்புரைகளை மேற்கொண்டாலும் தமிழ்நாட்டு மக்கள் மோடியை நம்ப மாட்டார்கள். பாஜகவிற்கு செல்வாக்கு உருவாகாது என்பதை விசிக அடித்து சொல்கிறது.
வருகின்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். கூட்டணி குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும். பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தேர்வு காண வேண்டும். தென் மாவட்டங்களில் தொடர்கின்ற ஜாதிய படுகொலைகளை தடுக்க அரசு மற்றும் காவல்துறை தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் பிரதமர் மோடி எத்தனை முறை குட்டிக்கரணம் அடித்தாலும் பாஜக வளராது - அமைச்சர் ரகுபதி
ஆணவக் கொலைகளும் அதிகரித்து வருகிறது. அண்மையில் சென்னை அடுத்த பள்ளிக்கரனையில் ஆணவ கொலை நடந்துள்ளது. முன்பெல்லாம் குக்கிராமங்களில் தான் இது போன்று கொலை நடக்கும். இப்போது நகரங்களிலும் நடக்கிறது. தமிழக அரசு ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். இது காலத்தின் தேவையாக உள்ளது என்றார்.