கோவில்பட்டியில் கந்துவட்டி கொடுமை தாங்காமல் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 9வது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகப்பாண்டி(வயது 45). ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் செய்து வந்தார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 பெண் குழந்கைகள் உள்ளனர். ஆறுமுகப்பாண்டி, தொழில் நிமித்தமாக கோவில்பட்டி, கழுமலை பகுதியைச் சேர்ந்தவர்களிடம் ரூ. 1 கோடியே 34 லட்சம் கடன் பெற்று வட்டி செலுத்தி வந்துள்ளார். திடீரென அவருக்கு தொழிலில் நட்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், கடன் வாங்கிய இடத்தில், வட்டிகூட கட்டமுடியாமல் திண்டாடி வந்துள்ளார். இதற்கிடையே, ஆறுமுகப்பாண்டிக்கு பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்க துவங்கி இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில், வட்டி விவகாரம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அங்கு ஆறுமுகப்பாண்டி பணம் கொடுக்க அவகாசம் கேட்டிருக்கிறார். போலீசார் முன்னிலையில் பேசி முடிக்கப்பட்டு, சில நாட்களில் ஆறுமுகப்பாண்டியை பணம் கேட்டு மீண்டும் டார்ச்சர் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது சொத்து பத்திரங்களையும் வீட்டிலிருந்து எடுத்து சென்றுள்ளனர்.
undefined
கோவையில் வீட்டில் தனியாக இருந்த திருநங்கை கொடூரமாக வெட்டி படுகொலை - போலீஸ் விசாரணை
இந்த நிலையில், ஆறுமுகப்பாண்டி கடந்த 25ம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரை அவரது மனைவி சித்ரா மற்றும் உறவினர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 27ம் தேதி ஆறுமுகப்பாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கந்து வட்டி காரணமாகத் தான் எனது கணவர் இறந்தார். அதற்கு காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால், அவரது உடலை வாங்க மாட்டோம் என்று கூறி, மறியல், காவல் நிலைய முற்றுகை என போராட்டம் நடந்தது.
28ம் தேதி அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து காலில் விழுந்து சித்ரா கண்ணீர் விட்டு கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆகியோரிடம் மனு அளித்தனர். காவல்துறையினர் ஒத்துழைப்புவுடன் கந்து வட்டி கும்பல் அட்டூழியம் அதிகரித்து வருகிறது என்பது குறித்து அடுத்தடுத்து செய்திகள் வெளியான நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையிலும், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் பாண்டி என்பவர் தற்கொலை செய்து கொண்ட ஆறுமுக பாண்டிக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆறுமுக பாண்டி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக காவலர் பாண்டியுடன் பேசிய உரையாடல் ஆடியோ தற்போது வெளியாக உள்ளது. அந்த ஆடியோவில் கந்து வட்டி கும்பல் தனக்கு கொடுக்கக்கூடிய தொந்தரவு குறித்தும், கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தும் அலட்சியம் காட்டுவது குறித்தும் பேசி உள்ளார். அதுமட்டுமல்லது காவலர் பாண்டி கொடுத்த பணம் மற்றும் வட்டி குறித்து கேட்பது தொடர்பாக அந்த ஆடியோவில் உள்ளது.
கந்து வட்டி கும்பலை தடுக்க வேண்டிய காவல்துறையைச் சேர்ந்தவரே வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளது இதன் மூலமாக உறுதியாகி உள்ளது. மேலும் கந்து வட்டி கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆறுமுக பாண்டி மற்றும் அவரது மனைவியும் பேசிய ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளன. இந்த நிலையில், 3ம் நாளான இன்று கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை ஆறுமுகப்பாண்டியின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.